Wednesday, January 23, 2008

What will happend after FED rate cut?

நேற்று காலை (ஜனவரி 22) அமெரிக்க பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே டவ் ஜோன்ஸ் (Dow Jones industrial average) கடுமையாக சரிந்தது. சுமார் 465 புள்ளிகள் சரிவை டவ் ஜோன்ஸ் எதிர்கொண்டது. பிறகு ஒரளவு இந்த சரிவு மீட்கப்பட்டது. இதனால் ஆசிய பங்குச்சந்தைகளும், இந்தியப் பங்குச்சந்தைகளும் உயரக்கூடும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

ட்வ் ஜோன்ஸ் இறுதியாக 128 புள்ளிகள் சரிவை அடைந்திருந்தது.

யாருமே எதிர்பாராத வகையில் அமெரிக்காவின் பிடரல் ரிசர்வ் (Federal Reserve) 75 புள்ளிகள் (75 basis points) அளவுக்கு வட்டி விகிதத்தை (Federal funds rate) குறைத்திருக்கிறது. அதாவது .75% . வட்டி விகிதம் 4.25% இருந்து 3.5% அளவுக்கு குறைந்திருக்கிறது. எளிமையாக விளக்கம் தர வேண்டும் என்றால் Federal funds rate என்பது அமெரிக்காவில் உள்ள வங்கிகள் தங்களுக்குள் ஒரு நாளுக்கு கடன் வழங்குவதற்கான வட்டி விகிதம். இந்த வட்டி விகிதம் தவிர Discount Rate என்னும் வட்டி விகிதத்தையும் பிடரல் ரிசர்வ் குறைத்திருக்கிறது. Discount Rate என்பது பிடரல் ரிசர்விடம் இருந்து வங்கிகள் குறுகிய காலத்திற்கு பெறும் வட்டி விகிதம். இது தற்பொழுது 4% என்றளவிற்கு குறைந்துள்ளது.

இது போன்று அதிரடியாக பிடரல் ரிசர்வ், வட்டி விகிதத்தை குறைப்பது வழக்கமில்லை. இவ்வளவு பெரிய அளவிளாலன வட்டி குறைப்பு 1990ம் ஆண்டு தான் அமெரிக்காவில் நடந்திருகிறது. அதுவும் அவசரமாக கூடி தற்பொழுது வட்டி விகிதம் குறைக்கப்பட்டது போன்று 2001ம் ஆண்டு நியூயார்க் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பொழுது தான் நிகழ்ந்தது. பென் பெர்னான்கே தலைமையிலான அமெரிக்காவின் பிடரல் ரிசர்வ் உலகெங்கும் பங்குச்சந்தைகள் சரியத்தொடங்கியதும் அவசரமாக திங்கள் இரவு கூடி விவாதித்து வட்டி விகிதத்தை குறைத்திருக்கிறது. அமெரிக்காவில் திங்களன்று விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு எமர்ஜன்சி (Emergency) காலம் போல வட்டி விகிதம் குறைக்கப்பட்டது அமெரிக்க பொருளாதாரம் எதிர்பார்த்த தேக்கத்தை (Recession) நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை இன்னும் அதிகரிக்கவே செய்திருக்கிறது. ஆனாலும் தற்காலிகமாக பிடரல் ரிசர்வின் அறிவிப்பு பங்குச்சந்தைகளுக்கு ஊக்கம் அளித்திருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு பிறகு ஐரோப்பிய பங்குச்சந்தைகள் சற்றே உயர்ந்தன. அமெரிக்க பங்குச்சந்தைகளும் இழந்த சரிவை மீட்டிருக்கின்றன.

ஆசிய பங்குச்சந்தைகளிலும், இந்திய பங்குச்சந்தைகளிலும் இந்த மாற்றம் எதிரொலிக்க கூடும்.

ஆனால் அமெரிக்க பொருளாதாரம் உண்மையிலேயே தேக்க நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வியும், அதற்கான விடையும் தான் உலகப் பங்குச்சந்தைகளின் போக்கினை அடுத்து வரும் நாட்களில் தீர்மானிக்கும்.

அமெரிக்கா பிடரல் ரிசர்வின் வழக்கமான கூட்டம் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் இன்னும் வட்டி விகிதம் குறைக்கப்படக்கூடும் என தெரிகிறது. இந்த வட்டி குறைப்பு எவ்வாறு அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்ற கேள்வி இயல்பானது தான். அதற்கு விடையை அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்து விரிவாக எழுதினால் தான் விளக்க முடியும். ஆனால் முழுமையாக அமெரிக்காவின் பொருளாதார பிரச்சனைகளை இந்த வட்டி விகித குறைப்பு மட்டும் சரி செய்து விட முடியாது.

அமெரிக்க பொருளாதார தேக்கம்

தற்பொழுது வீட்டுக்கடன் வட்டி விகிதம் 7.25% இருந்து 6.50% அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் வீட்டுக்கடனை செலுத்த முடியாமல் தங்கள் வீடுகளை இழக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு இது பலனளிக்கும் என பிடரல் ரிசர்வ் நம்புகிறது. அமெரிக்காவின் மார்ட்கேஜ் (Mortgage) சார்ந்த சப் பிரைம் (Sub-prime) கடனால் ஏற்பட்டிருக்கும் கடன் பிரச்சனைக்கு (Credit Crisis) இது ஓரளவிற்கு நிவாரணமாக இருக்க முடியுமே தவிர, இதுவே முழுமையான தீர்வாக முடியாது.

பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் இழப்புகளை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. இன்று அமெரிக்காவின் முக்கியமான வங்கிகளான பேங்க் ஆப் அமெரிக்கா, வக்கோவியா போன்றவை சப் பிரைம் காரணமாக இழப்புகளை அறிவித்து உள்ளன. இவை தவிர பல அமெரிக்க நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான இழப்புகளை அறிவித்துள்ளன. இவை சப்-பிரைம் சார்ந்த சி.டி.ஒ (CDO - Credit Debt Obligations) பிரச்சனையால் நேர்ந்த இழப்பு. இந்த நிறுவனங்களின் இழப்பு இந்த வட்டி விகிதங்களை விட ஆழமான விவகாரம். இது அமெரிக்க நிறுவனங்கள் வீட்டு கடன் வழங்கும் விதத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இன்றைய அமெரிக்க பொருளாதார சரிவிற்கும் இவை தான் காரணம்.

ஒரு சிறிய உதாரணத்தை காட்டினாலே இந்தப் பிரச்சனையின் ஆழம் புரியும்.

இந்தியாவில் வீட்டுகடன் என்றால் 10 லட்சம் கடன், அதற்கு 10% வட்டி, மாதம் இவ்வளவு ரூபாய் தவணை (EMI), குறிப்பிட்ட வருடங்களுக்கு செலுத்த வேண்டும் என மிகவும் நேரடியாக வீட்டுக்கடன் தான் இருக்கும். ஹிடன் காஸ்ட் (Hidden Cost) பெரும்பாலும் இருக்காது. அது போல 90% வங்கி கடன் கொடுத்தால் 10% நாம் முதலீடு செய்ய வேண்டும். (சில வங்கிகள் 100% கூட கொடுக்க தொடங்கியிருக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது என அமெரிக்காவில் இன்று நடக்கும் பிரச்சனைகளை கவனித்தால் புரியும்).

ஆனால் அமெரிக்காவின் மார்ட்கேஜ் (Mortgage) முறை சிக்கலானது. சற்று முன்னேறிய நிதி வடிவம். அது தான் இன்று அமெரிக்கா சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம்.

உதாரணமாக பளூன் லோன் (Balloon Mortgage) என்று ஒரு கடன் உண்டு. இதில் உங்களுக்கு 80% கடன் கிடைக்கும். மீதம் உள்ள 20% உங்களிடம் இருந்தால் நீங்கள் முதலீடு செய்யலாம். இல்லையா பிரச்சனையில்லை. அந்த 20% பணத்திற்கு மற்றொரு கடன் வாங்கிக் கொள்ளலாம். அந்த 20% பணத்திற்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். அவ்வளவு தான். முதல் 7 வருடங்கள் வட்டி மட்டும் செலுத்திக் கொண்டே இருக்கலாம். 7 வருடங்களுக்கு பிறகு நீங்கள் மறுபடியும் வேறு நிறுவனத்திடம் ரீபினான்ஸ் செய்து கொள்ளலாம் (Re-finance). அதாவது ஒரு பைசா செலவில்லாமல் ஒரு வீடு உங்களுக்கு கிடைக்கும் என்பது தான் அந்த முறை.

ரியல் எஸ்டேட் அமெரிக்காவில் கொடி கட்டி பறந்த காலத்தில் பலர் இவ்வாறு தான் வீடு வாங்கினார்கள். வங்கிகள் கடன் கொடுத்து தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்துவார்களா என்ற கவலை சிறிதும் இல்லாமல் பலருக்கும் கடன்களை வாரி வழங்கின. இப்படி கடன்களை வாரி வழங்கினால் அந்த வங்கிகளுக்கு பணம் வேண்டாமா ? கவலையில்லை. அதற்கும் வழி உண்டு. மார்ட்கேஜ் நிறுவனங்களிடம் இருந்து அவை மார்ட்கேஜ் செக்கியூரிட்டிஸ்க (Mortgage Securities) மாற்றம் பெற்று பெரிய நிறுவனங்களிடம் செல்லும். பெரிய நிறுவனங்கள் அதனை CDO (Credit Debt Obligations) மாற்றி வெளிநாட்டிலும், பிற நிறுவனங்களிடமும் விற்பார்கள். இப்படி பண புழக்கம் இருந்து கொண்டே இருந்தது. பலருக்கும் கடன் வழங்க முடிந்தது. இப்படி உருவான பல சிடிஓக்கள் (CDO) சப் பிரைம்களை அடிப்படையாக கொண்டவை.

கடந்த வருடம் ஆரம்பம் முதல் ரியல் எஸ்டேட் சரிய தொடங்கியது. எந்த ஒரு முதலீடு இல்லாமலும் பலர் வீடுகளை வாங்கி அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்கள் செலுத்துவது எல்லாம் வட்டி மட்டுமே. முதலீடு எதுவும் இல்லை. ரியல் எஸ்டேட் சரிய தொடங்கியதும் 100,000 டாலர் பெறுமானமுள்ள வீடுகள் 90,000, 80,000 70,000 என சரிய தொடங்கின. இப்பொழுது என்ன செய்யலாம் ? முதலீடாக ஏதாவது பணம் செலுத்தியிருந்தால் அந்த வீட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை இருக்கும். தவணையை தொடர்ந்து செலுத்தி கொண்டு இருப்போம். ஆனால் முதலீடு செய்ய வில்லை. வெறும் வட்டி மட்டும் தான். அதுவும் 7 வருடங்களுக்கு பிறகு மறுபடியும் ரீபினான்ஸ் (Re-finance) செய்யும் பொழுது வட்டி விகிதம் இன்னும் அதிகரிக்கும். பலர் தங்கள் தவணையை நிறுத்திக் கொண்டனர். இது வரை அந்த வீட்டிற்காக கட்டியதை வீட்டு வாடகையாக கூட வைத்துக் கொள்ளலாமே...

இது தான் ஆரம்பம். இதன் விளைவுகள் தான் இன்று அமெரிக்கா எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள். சரியாக தவணை செலுத்தாதவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். ஆனால் சரியாக தவணையை செலுத்தியவர்கள், பணத்தை முதலீடு செய்தவர்களின் நிலை தான் பரிதாபம்.

அமெரிக்க நிறுவனங்கள் இவை வெறும் சப்-பிரைம் என கூறி தப்பித்துக் கொள்கின்றன. உண்மை அதுவல்ல. கடன் வழங்கிய முறை தவறு. அதனை சிடிஓக்களாக (CDO) விற்ற முறை தவறு. அந்த சிடிஓக்களை (CDO) மதிப்பீடு (Valuation) செய்த முறை தவறு. ரிஸ்க் மேனேஜ்மண்டில் (Risk Management) குளறுபடி.

இத்தனை குளறுபடிகள் இன்று உலகப் பொருளாதாரத்தையே அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.

thanks to bullish tamilan

MCXARUN
9994500540

2 comments:

GANESH PL said...

அருண்,
மிக சரியான அலசல், நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் பதிவு, முடிந்த அளவு தமிழிலேயே தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம், தங்களின் இப்பணி தொடர வாழ்த்துக்கள்,.... நன்றி.....

வால்பையன் said...

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்,